மும்பை அருகே கட்டிடம் இடிந்து 7 பேர் பலி

மும்பை அருகே கட்டிடம் இடிந்து 7 பேர் பலி

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ் நகர் நேரு சவுக் பகுதியில் சாய் சக்தி என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ் நகர் நேரு சவுக் பகுதியில் சாய் சக்தி என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள சிலாப் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், தானே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் துரித கதியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணி நேற்று அதிகாலை 1 மணி வரை நடந்தது.

இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளில் இருந்து 7 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன், 3 பெண்கள் அடங்குவர். பலியானவர்கள் அனைவரும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் துயரத்துக்கு காரணமான கட்டிடம் கட்டப்பட்டு 26 வருடங்கள் ஆனது தெரியவந்தது.

சம்பவ இடத்தை தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்வையிட்டார். அப்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.