
கொரோனாவால் மே மாதத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி
நாடு முழுவதும் நேற்று புதிதாக 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,847 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் வீரியம் குறைந்து புதிய பாதிப்புகள் சரிந்தாலும், உயிரிழப்புகள் இன்னும் குறையவில்லை.
நாடு முழுவதும் நேற்று புதிதாக 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,847 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்தது.
இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 93 ஆகவும், பலி எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 235 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 24-ந் தேதி பாதிப்பு 1.95 லட்சமாக குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டதும் ஒரு காரணம் ஆகும்.
நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 22,17,320 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிலவரப்படி நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 2,11,853 ஆக இருந்த நிலையில் நேற்று வரை உயிரிழப்புகள் 3.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இம்மாதத்தில் இதுவரை மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு தகவல்படி, அமெரிக்காவில் கொரோனா 2-ம் அலையால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 98,293 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் இம்மாதம் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில், ஒரு மாத பலி எண்ணிக்கை 1 லட்சத்தைவிட அதிகரித்து உலக அளவில் புதிய உச்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
மொத்த பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-ம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் கடந்த ஏப்ரல் மாதம் 84,319 பேர் இறந்ததே ஒரு மாத பலி எண்ணிக்கையில் உச்சமாக உள்ளது.
உலக அளவில் மே மாதத்தில் இதுவரை 3.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதில் 32 சதவீத உயிரிழப்புகள் இந்தியாவில் மட்டும் ஏற்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 33,764, கேரளாவில் 28,798, கர்நாடகாவில் 26,811, மகாராஷ்டிராவில் 24,752, ஆந்திராவில் 18,285, மேற்குவங்கத்தில் 16,225 பேருக்கு தொற்று உறுதியானது.
மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு இதுவரை 56,50,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அதிகபட்சமாக கர்நாடகாவில் 24,99,784, கேரளாவில் 24,24,388, தமிழ்நாட்டில் 19,45,260, உத்தரபிரதேசத்தில் 16,80,684, ஆந்திராவில் 16,27,390, டெல்லியில் 14,21,477, மேற்கு வங்கத்தில் 13,18,203 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 992, கர்நாடகாவில் 530, தமிழ்நாட்டில் 475, கேரளாவில் 151, பஞ்சாபில் 185, உத்தரபிரதேசத்தில் 193, மேற்குவங்கத்தில் 153, டெல்லியில் 130, ராஜஸ்தானில் 107, அரியானாவில் 106 பேர் இறந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் 91,341, கர்நாடகாவில் 26,929, டெல்லியில் 23,695, தமிழ்நாட்டில் 21,815, உத்தரபிரதேசத்தில் 19,712, ஆந்திராவில் 10,427, மேற்கு வங்கத்தில் 14,827, சத்தீஸ்கரில் 12,779, பஞ்சாபில் 13,827 பேர் அடங்குவர்.
புதிய பாதிப்புகளைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக உள்ளது. நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் குணமடைந் துள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24 லட்சத்து 19 ஆயிரமாக குறைந்துள்ளது.