இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி- மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல்

இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி- மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும் உள்ளன. 

அவ்வகையில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை புனேயை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. COVAXIN என்ற இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது.

 

கொவேக்சின் மருந்து

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற மற்றொரு இந்திய நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றியடைந்ததால், மருந்து கட்டுப்பாட்டு  தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி இரண்டு கட்டங்களாக பரிசோதனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது. 

உலகம் முழுவதிலும் இதுவரை 17 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகின்றன.