தொடர் சர்ச்சையாகவிருக்கும் எம்.சி.சி விவகாரம்! அமைச்சர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தொடர் சர்ச்சையாகவிருக்கும் எம்.சி.சி விவகாரம்! அமைச்சர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் பொதுச் சட்டத்திற்கு முரணான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மற்றும் நாட்டின் இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கைகளிலும் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திடாது என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த வாரம் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்த பின்னர், எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக கடந்த அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த உடன்படிக்கை சம்பந்தமாக பேராசிரியர் லலிதசிறி குணருவான் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கையை ஜனாதிபதி, அமைச்சர்கள் அனைவருக்கும் வழங்கினார்.

அத்துடன் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமது நிலைப்பாடுகளை முன்வைக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனடிப்படையில் எந்த வெளிநாடாக இருந்தாலும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் முரணான, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மற்றும் நாட்டுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.