குண்டர்களினால் 8 பொலிஸார் சுட்டுக்கொலை: உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்

குண்டர்களினால் 8 பொலிஸார் சுட்டுக்கொலை: உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்

உத்தரப்பிரதேசம்- கான்பூரில் 60 வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான விகேஷ்  துபேவை பிடிக்க முற்பட்ட டி.எஸ்.பி. உட்பட 8 பொலிஸாரை குண்டர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, “60 வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான விகேஷ்  துபேவை, பொலிஸார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பிகார் கிராமத்தில்  குறித்த சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணியளவில் 50 பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதனை அறிந்த சந்தேகநபரான விகேஷ் துபே உள்ளிட்ட குழுவினர் ஜே.சி.பி.இயந்திரத்தை  வீதியின் குறுக்கே நிறுத்தி பொலிஸாரின் வாகனங்களுக்கு தடையை ஏற்படுத்தினர்.

இதனால் பொலிஸார் வாகனத்தை விட்டு கீழே இறங்கி சுற்றிவளைப்பினை மேற்கொள்ள முயற்சித்தனர். இதன்போது உடனடியாக செயற்பட்ட குண்டர்கள் குழு 8 பொலிஸாரை சுட்டுக்கொன்றனர்.

மேலும் சில பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிஸார் அவர்களை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.