
அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள உத்தரவு
நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்றிறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03) ஆலோசனை வழங்கினார்.
பத்தரமுல்ல, சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாமதப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.
நிறுவனங்களுக்கிடையிலான உறவில் காணப்படும் விரிசலே இவ்வாறு சில திட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் என சுட்டிக்காட்டிய பிரதமர், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்போது, சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல், குறைந்த வசதிகளை கொண்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தல், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், கடல் மாசை தடுத்தல், மீன்வள துறைமுகங்களின் திண்மக்கழிவு மேலாண்மை, மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகற்றுதல், சமூக நில மேம்பாடு உள்ளிட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்குரிய நிறுவனங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு பெற்றுக்கொடுத்தார்.
வெலிக்கட சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை கோட்டை மற்றும் கண்டி வாகன நிறுத்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
அதற்கமைய 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட நாட்டை அபிவிருத்தி செய்யும் வேகமான நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.