
கொவிட்-19 நோயால் முதலாவது மருத்துவரை இழந்தது இலங்கை
கொவிட் 19 தொற்றுறுதியாகி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் கயான் தந்தநாராயன இன்று உயிரிழந்தார்.
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகி உயிரிழந்த முதலாவது மருத்துவராகவும் சுகாதார உறுப்பினராகவும் அவர் பதிவாகியுள்ளார்.
32 வயதான குறித்த மருத்துவர் ராகம வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நிலையில் தொற்றுறுதியானது.
இதனையடுத்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 27 ஆம் திகதி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மருத்துவர் இன்றைய தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்தார்.
தமது பிரத்தியேக செயலாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் தாம் தனிமைப்படுத்தலில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தமக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இன்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட 826 கொவிட் 19 நோயாளர்களில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் நேற்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் 78 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 62 பேருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.