கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கடந்த வருடம் (2020) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பது தொடர்பான நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பது தொடர்பான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தரம் 1-13 ஆண்கள், பெண்கள், கலவன் பாடசாலைகள் மற்றும் தரம் 6-13 கொண்ட ஆண்கள், பெண்கள், கலவன் பாடசாலைகள், தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கான புலமைப்பரிசில் மாணவர்களை இணைப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பாடசாலைகளில் புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களை இணைப்பது தொடர்பில் ஏற்கனவே காணப்படும் சுற்றறிக்கைகளின்படி இச்செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.

2017, 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என, சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த ஜனவரி 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை வெட்டுப்புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது சிறுவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பெற்றோர் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில், பிரயோக ரீதியிலான பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

புள்ளிகளை குறைத்து மாணவர்களுக்கு சலுகை செய்யுமாறு பெற்றோர் விடுத்த பரிந்துரைக்கு அமைய, குறித்த வெட்டுப்புள்ளிகளை, ஒன்று அல்லது இரண்டால் குறைத்து, தரம் 6 இற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

புள்ளிகளைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கும் மாணவர்கள் காரணமாக, தற்போது காணப்படும் வகுப்பறைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டி நேரிடலாம் எனவும், வகுப்பறைகள், மனித வளம் உள்ளிட்ட பிரயோக ரீதியிலான சவால்களுக்கு மத்தியில் இது ஒது சிக்கலான நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இது தொடர்பில் தற்போதுள்ள நிலமைகளை அவதானித்து, பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு அடுத்த ஒரு மாதத்திற்குள் மாணவர்களை சேர்ப்பதற்கு வெளிப்படையான நடைமுறையொன்று பின்பற்றப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, புலமைப்பரிசில் மாணவர்களை பதிவு செய்யும் நடைமுறையை மேலும் ஒரு மாதம் தாமதப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.