எய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி

எய்ட்ஸ் நோயாளியை கல்லூரி மாணவி காதலித்ததோடு நெருக்கமாக இருந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 


போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஆட்டோ டிரைவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இருவரும் கோவையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவை சென்று மாணவியை மீட்டனர். ஆட்டோ டிரைவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது மாணவி காதலித்து வந்த ஆட்டோ டிரைவர் எய்ட்ஸ் நோயாளி என்பது தெரியவந்தது. இந்த தகவலை ஆட்டோ டிரைவரே போலீசாரிடம் தெரிவித்தார். இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உயிர்கொல்லி நோயை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே என்று ஆட்டோ டிரைவரை போலீசார் கண்டித்தனர். அப்போது மாணவி குறுக்கிட்டு, ‘அவர் எய்ட்ஸ் நோயாளி என்று எனக்கு முன்பே தெரியும். பரிதாபத்தின் அடிப்படையில்தான் காதலித்தேன்’ என்று கூறினார். மேலும் தங்களை சேர்த்து வைக்கும்படி மாணவி அழுது புலம்பினார். மாணவியிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மாணவியும், ஆட்டோ டிரைவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். எனவே மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதோடு ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

எய்ட்ஸ் நோயாளியை கல்லூரி மாணவி காதலித்ததோடு நெருக்கமாக இருந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.