பாடசாலைகளில் முறையற்ற பண வசூல் ; அம்பலப்படுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம்
கல்வி அமைச்சு அண்மையில் நிதி வசூலிப்பதைத் தடை செய்வதாகக் கூறிய போதிலும், பாடசாலைகளில் தொடர்ச்சியாகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.
இந்த சூழல் குடும்பங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும், இது ஒரு "வருத்தத்திற்குரிய நிலை" என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெறும் ஊடக அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து, நிதி வசூலிப்பதைத் தடை செய்யும் முறையான சுற்றறிக்கையைக் கல்வி அமைச்சு உடனடியாக வெளியிட வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 5/2015 சுற்றறிக்கையின் கீழ், வருடாந்த பராமரிப்பு செலவுகள் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சங்கம் வலியுறுத்துகிறது.
வகுப்பறை ரீதியான பெற்றோர் குழுக்கள் மூலம் திருத்த வேலைகள், வர்ணம் பூசுதல் போன்றவற்றுக்காக நிதி வசூலிக்கப்படும் "புதிய முறை" ஒன்று உருவாகியுள்ளதாகச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பல முன்னணி பாடசாலைகளில் பாரிய அளவிலான நிதி வங்கிகளில் நிலையான வைப்புக்களாக (Fixed Deposits) வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை மாணவர் நலன்களுக்காகப் பயன்படுத்தாமல், மீண்டும் பெற்றோரிடம் பணம் கோருவது நியாயமற்றது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDS) உத்தியோகபூர்வ கணக்குகளுக்குப் புறம்பாக, வெவ்வேறு பெயர்களில் வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் முறையான தணிக்கை (Audit) இன்றி நிதி கையாளுவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன் "2026 ஆம் ஆண்டில் மாத்திரம் பல பாடசாலைகளில் இவ்வாறான சட்டவிரோத வசூலிப்புகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன.
கல்வி அமைச்சு உடனடியாக தலையிட்டு புதிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும்." என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.