ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலில்..!

ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலில்..!

வவுனியா நீதவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் முன்னிலையான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் இடம்பெற்று வந்தநிலையில் தொல்பொருள் திணைக்களம், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் மாதம் ஆறாம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர், கடந்த நவம்பர் மாதம் ஆறாம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையான நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பல வழக்குகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வழக்கினை முன்னரே அழைக்குமாறு தொல்பொருள் திணைக்களம் சார்பாக முன்னிலையான சட்டதரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

எனினும், வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினர் தமக்கு அறியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர், நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை.
அன்றைய தினம் அவர்களது பிணையும் இரத்தாகியிருந்த நிலையில், ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்குத் தவணைக்காக நீதிமன்றில் முன்னிலையான ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.