பல்கலைகழகங்களின் தேர்வை இரத்துச்செய்ய நிபுணர் குழு பரிந்துரை

பல்கலைகழகங்களின் தேர்வை இரத்துச்செய்ய நிபுணர் குழு பரிந்துரை

பல்கலைகழகங்களின் தவணைத் தேர்வை இரத்துச்செய்ய வேண்டுமென பல்கலைக்கழக மானிய அணையகம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்ரோபரில் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் 2019-2020ஆம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி தவணைத் தேர்வை நடத்துவது குறித்து பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், மாற்று வழிகளைக் கண்டறியும் நோக்கில் ஹரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் நிபுணர் குழுவொன்றை பல்கலைக்கழக மானிய அணையகம் அமைத்திருந்தது.

அந்தவகையில், பல்கலைகலைக்கழகத் தேர்வு குறித்து நிபுணர் குழு விடுத்துள்ள பரிந்துரையில், “பல்கலைக்கழக தவணைத் தேர்வுகளை கொரோனா நெருக்கடியான தற்போதைய சூழலில் முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான மாணவர்களின் நலன்குறித்து கவனத்திற்கொண்டு, அவர்களின் கடந்த ஆண்டுகளிலான தவணைத் தேர்வின் செயற்றிறனை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்.

அத்துடன் கடந்த தேர்வுகளின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படுவதில் விருப்பமில்லாத மாணவர்களுக்கு, கொரோனா நெருக்கடி குறையும்போது தேர்வுகளை நடத்துவதற்கு பரிந்துரைக்கிறோம்.

இதேவேளை, புதிய கல்வியாண்டை ஆரம்பிப்பது, கல்லூரிகளைத் திறப்பது உள்ளிட்ட அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகளை வரும் ஒக்ரோபர் வரை ஒத்திவைப்பதற்கும் பரிந்துரைக்கிறோம்” என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.