`டிக் டாக்-க்கு மாற்றாக வந்த இந்திய செயலி' -எப்படி இருக்கிறது மித்ரோன்?

`டிக் டாக்-க்கு மாற்றாக வந்த இந்திய செயலி' -எப்படி இருக்கிறது மித்ரோன்?

டிக் டாக் போன்ற செயல்பாட்டைக் கொண்ட 'மித்ரோன்' ஆப் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயன்பாட்டிலும் சரி, தரத்திலும் சரி அச்சு அசலாக டிக் டாக் போலவே இருக்கிறது

இந்தியாவில் டிக் டாக் எவ்வளவு பிரபலம் என்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. வந்து சில வருடங்களே ஆகியிருந்தாலும் பலராலும் டவுன்லோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியர்கள் யூடியூப்பை விட அதிக நேரம் டிக் டாக்கில் செலவழிக்கின்றனர் என்றால் மிகையாகாது. ஆனால் தொடர்ந்து சீன ஆப்களின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். டிக் டாக்கை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு இது இன்னும் திவீரமடைந்து இருக்கிறது. பலரும் டிக் டாக்கிற்கு மாற்றாக 'மித்ரோன்' என்னும் இந்திய ஆப்பை பரிந்துரைக்கின்றனர்.

Tiktok

Tiktok

எப்படி இருக்கிறது மித்ரோன்?

டிக் டாக் போன்ற செயல்பாட்டைக் கொண்ட 'மித்ரோன்' ஆப் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயன்பாட்டிலும் சரி, தரத்திலும் சரி அச்சு அசலாக டிக் டாக் போலவே இருக்கிறது. ஏற்கெனவே டிக் டாக் இந்தியாவில் கடந்த சில மாதங்களாகப் பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இந்திய மக்கள் பலரும் குறைந்த ரேட்டிங் வழங்கி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக்கை நீக்க வேண்டும் எனக் கூறிவந்தனர். பின்னர் கூகுளின் தலையீட்டால் அந்த ரேட்டிங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

டிக் டாக் போன்றே மித்ரோனிலும் சிறிய வீடியோக்களை உருவாக்கி உங்களால் பதிவேற்ற முடியும். மித்ரோன் ஆப் சிவாங்க் அகர்வால் என்னும் ஐஐடி மாணவரால் உருவாக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் டிக் டாக்கிற்கு மாற்றாக மித்ரோன் கருதப்பட்டு பலராலும் பதிவிறக்கப்பட்டது. இதை லட்சக்கணக்கான மக்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் தொடங்கினார். ஆனால் அதன் பிறகு மித்ரோன் பாகிஸ்தானில் உள்ள மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. மேலும் இந்த செயலி தனிநபர் பாதுகாப்பு கொள்கைகள் சரியாக இல்லை எனக் கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியது.

தொழில்நுட்ப கோளாறுகளையும், தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களையும் சரிசெய்தால் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரிலும் இடம்பெறலாம் எனவும் கூகுள் தெரிவித்தது. இந்நிலையில் இவை எல்லாம் சரி செய்யப்பட்ட பின் கூகுள் பிளே ஸ்டோரிலும் கடந்த வாரம் திரும்பவும் இடம்பிடித்தது மித்ரோன். மீண்டும் தற்போது சீன பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளதால் பலரும் இதைத் தேடிப் பதிவிறக்கிவருகின்றனர்.

Tik Tok v Mitron

Tik Tok v Mitron

இதனால் இதே போன்ற போலி ஆப்களும் கிட்டத்தட்ட இதே பெயரில் உருவாக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் மித்ரோன் ஆப்பை தரவிறக்கம் செய்வதாக இருந்தால் அது 'MitronTV' யால் உருவாக்கப்பட்டதா என்று மட்டும் உறுதி செய்து கொள்ளவும். மற்றபடி இது ஆரம்பக்கட்டத்தில்தான் இருப்பதால் இன்னும் டிக் டாக் அளவுக்கு அம்சங்கள் இல்லை. ஆனால் போகப் போக இது மேம்படும் என எதிர்பார்க்கலாம்.