வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்- அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மேலும் 29 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்தத் திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.