வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்!

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்!

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மாதிரி வாகனத்தில் பொருத்தப்பட்ட மிகச் சிறிய அளவிலான தெளிப்பான், அஜ்மீர் மற்றும் பிகானிரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருவிகளை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை சமாளிக்க ஏதுவாக, மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு, வாகனத்தில் பொருத்தக்கூடிய மிகச் சிறிய அளவிலான தெளிப்பானை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.

இந்த முயற்சியை மேற்கொண்ட மத்திய வேளாண் துறையின் இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு, இந்திய உற்பத்தியாளர் மூலம் தனிவகைத் தெளிப்பான் ஒன்றை ஒருவாக்கியுள்ளது.

இந்தத் தெளிப்பான், ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மற்றும் பிகானிர் மாவட்டங்களில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கருவியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியத்திற்கு, இந்த முயற்சி முடிவுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வின் போது, ட்ரோன்களை (ஆளில்லா குட்டி விமானங்கள்) பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவுறுத்தியிருந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் தற்போதைய விதிமுறைகளின் படி, ட்ரோன்களில் பூச்சி மருந்துகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

எனவே, ட்ரோன்களில் பூச்சி மருந்துகளை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு, வேளாண் மற்றும்விவசாயிகள் நலத்துறை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொண்டிருந்தது.

அதன் பேரில், ஃபரீதாபாத்தில் உள்ள தாவரப் பாதுகாப்பு, தனிமைப்படுத்துதல் மற்றும் சேமிப்பு இயக்ககம் போன்ற அரசு நிறுவனங்கள் மட்டும், வெட்டுக்கிளிகைளைக் கட்டுப்படுத்த ட்ரோன்களைப் பயன்படுத்திக் கொள்ள, விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

அத்துடன், ட்ரோன்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துச் சென்று தெளிப்பதற்கான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், மத்திய பூச்சிக்கொல்லிகள் வாரியத்தின் வெட்டுக்கிளிகள் பிரிவும் ஒப்புதல் அளித்துள்ளது.