அப்பட்டமான பொய் -இந்திய ஊடகங்கள்மீது சீனா பாய்ச்சல்
லடாக் மோதலில் தமது இராணுவத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இந்திய - சீன இராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் (உயிரிழப்பு மற்றும் காயம்) மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் உள்படப் பல நாட்டின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இது தொடர்பாக கூறியதாவது ‘‘இந்திய - சீன இராணுவ மட்டத்திலும், தூதரக மட்டத்திலும் இருதரப்பு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கின்றன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அது பொய்யான தகவல் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றார். ஆனால் இது குறித்து விரிவாக எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.