இந்தியாவில் கழிவு நீரின் மூலம் பரவும் கொரோனா வைரஸ் : ஆய்வில் தகவல்!
வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணுவை ஒத்துள்ள 3 வைரஸ் படிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் திகதி காணப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட மே 27ஆம் திகதி வைரஸ் அடர்த்தி அதிகமாக இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆமதாபாத் சிவில் வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வைரஸின் அடர்த்தி அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளது. இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே இதை கண்டுபிடித்துள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.