லடாக்கை தொடர்ந்து சிக்கிமில் இந்திய – சீன வீரர்கள் மோதல்: காணொலியால் பரபரப்பு
லடாக்கை தொடர்ந்து சிக்கிமின் பனிப்படர்ந்த உயர்ந்த சிகரத்தில் இந்திய – சீன வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி மோதி கொள்ளும் காணொலி வெளியாகியுள்ளது.
கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட சுமார் 5 நிமிடங்கள் வரை ஓடும் இந்த காணொலியில், சீன இராணுவ அதிகாரி ஒருவரை, இந்திய வீரர்கள் முகத்தில் குத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இருநாட்டு இராணுவ வீரர்களும் வாக்குவாதம் செய்துகொண்டே கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இருதரப்பிலும் இருந்து ‘திரும்ப போ, சண்டையிடாதே’ என மற்ற வீரர்கள் கோஷமிடுகின்றனர்.
பனி படர்ந்த இடத்தில் ஒருவருடன் மற்றொருவர் கூச்சலிட்டப்படி கைகளால் தாக்கி மோதி கொள்கின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, தாக்குதலுக்கு உள்ளான சீன வீரரிடம் இந்திய இராணுவ அதிகாரி நலம் விசாரிப்பதோடு அந்த காணொலி முடிகிறது.
இந்த மோதல் எப்போது நடைபெற்றது என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாவில்லை.
அண்மையில், காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, கல்வான் பள்ளதாக்கில் நடந்த மோதல் தொடர்பாக இந்திய – சீன இராணுவ உயரதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த காணொலி வெளியாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.