நோய் எதிர்ப்பு சக்தி ஓர் பார்வை

நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்க தினம் தினம் நோய்க்கிருமிகள் உடன் போராடி நம்மை காக்கிறது. நம் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

அன்றாடம் நாம் பலவித செயல்களில் ஈடுபடுகிறோம். நம் உடலுக்குள் நாம் சாப்பிடும் போதும், மூச்சு விடும் போதும், பேசும்போதும் பலவிதமான நோய்க்கிருமிகள் செல்கின்றன. அக்கிருமிகள் எல்லாம் நம் உடலில் நோயை உண்டாக்க தொடங்கினால் நாம் ஒருநாள் கூட நோயின்றி வாழ முடியாது. ஆனால் நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்க தினம் தினம் நோய்க்கிருமிகள் உடன் போராடி நம்மை காக்கிறது. நம் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

 

ஒரு நோய்க் கிருமி நம் உடலுக்குள் நுழைந்த உடன் அது ரத்தத்தில் கலந்து நம் உடலின் முக்கிய உறுப்புகளை சென்றடைய முயலும். அப்போது ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வெள்ளை அணுக்கள் நோய்க்கிருமிகளை இனம் கண்டு கொண்டு, அவற்றின் உருவம், அளவு, எடை, அதன் நச்சுத் தன்மைகள் போன்றவற்றை கணக்கிட்டு நம்முடைய ஈரல் கல்லீரல் மண்ணீரல் போன்றவற்றுடன் சேர்ந்து பல சிறப்பு வெள்ளை அணுக்களை தயாரிக்கின்றன. 

 

இந்த எதிர்ப்பு சக்தி வெள்ளையணுக்கள் நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டவையாக இருக்கும். இந்த எதிர்ப்பு சக்தி வெள்ளை அணுக்கள் நோய்க் கிருமிகள் அனைத்தையும் தாக்கி அழித்து பின்பு ரத்த ஓட்டத்திலிருந்து அவற்றைப் பிரித்து நிணநீர் ஓட்டத்திற்குள் அனுப்பிவிடும். இறந்த நோய்க்கிருமிகளை நிணநீரோட்டம் நம் உடலிலிருந்து அப்புறப் படுத்தி விடும். இதுவே நம் உடலில் சிறப்பாக இயங்கி வரும் நோய் தடுப்பாற்றல் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி. இவ்வளவு சிறப்பாக இயங்கிவரும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பாதுகாத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தானே. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நாம் எப்படி எல்லாம் பாதுகாக்கலாம் என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

 

 

உணவு

 

நம் உணவு நல்ல ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உணவில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் , முழு தானியங்கள் பருப்பு வகைகள், பால், முட்டை , தாவர எண்ணெய்கள் போன்றவைகள் அவசியம் இருக்க வேண்டும். விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி 6, விட்டமின் ஈ, இரும்புச்சத்து, போலிக் ஆசிட், சிங்க், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்ததாக நம் அன்றாட உணவு இருக்க வேண்டும். உணவை நிதானமாக நன்கு சுவைத்து விரும்பி உண்பது மிகவும் அவசியம். நொறுக்கு தீனிகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தயாரிக்க நம் உடலுக்கு பல சிறப்பு புரதங்கள் தேவைப்படுகிறது. இந்த புரதங்களை தயாரிக்க பல நுண் சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவைகள் நமக்கு ஆரோக்கியமான உணவிலிருந்து தான் கிடைக்கும்.

 

உடற்பயிற்சி

 

வாரத்தில் 5 நாட்களாவது துரித நடை பயிற்சி, யோகாசனம், உடற்பயிற்சி, துரித ஓட்டம், மெதுவான ஓட்டம், நீச்சல், மற்றும் டென்னிஸ், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுவது நல்லது. விளையாட்டுகளில் ஈடுபடும் போது நம் உடலில் வியர்வை மூலம் தேவையில்லாத நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன, மேலும் இதயம் துரிதமாக இயங்கி ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கினால் மட்டுமே நம் உடலின் நோய் எதிர்ப்பு இயக்கமும் சரியான முறையில் நடக்கும்.

 

மது, புகை ஒழித்தல்

 

நம் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் போன்றவற்றை பாதிக்கக்கூடிய மது, புகை பழக்கங்களை முழுமையாக விட்டுவிடுவது நம் உடலின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தக் கூடியது. கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் துணையில்லாமல் நம் உடலால் நோயெதிர்ப்பு அணுக்களை தயாரிக்க முடியாது.

 

மனநலம்

 

மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஆன கோபம், பயம், பதட்டம் போன்றவை நம் உடலில் தேவையில்லாத உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் நம் உடல் ஆரோக்கியமான முறையில் இயங்குவதற்கு தடையாக செயல்படுகின்றன. நோய்க் கிருமிகளை அழிக்க உடல் எதிர்ப்பு சக்தி அணுக்களை உருவாக்கும் செயல்பாட்டிற்கும் இந்த ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் தடையாக இருக்கின்றன. 

 

எனவே நம் மனதில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களால் ஆன அன்பு, கருணை, நேசம், பாசம், நன்றி உணர்ச்சி, மன்னிப்பு மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை கொண்டிருப்பது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல முறையில் இயக்க உதவும். மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கக் கூடியவை. 

 

எனவே நம் உறவுகளுடன் விட்டுக்கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்வதும், பொறாமை வஞ்சம் போன்ற எண்ணங்கள் மனதில் எழாமல் பார்த்துக் கொள்வதும், மனத்திருப்தியுடன் வாழ பழகிக் கொள்வதும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கும். இந்த குணங்கள் மனதில் எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களும் உற்சாகம் மற்றும் உத்வேகம் கொடுக்கக் கூடியவையாகவும், சுயமதிப்பு சுயமரியாதை மற்றும் சுய அன்பை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதனால் நம் மனம் ஆரோக்கியமாக இயங்கும். அப்பொழுதுதான் உடலின் செயல்பாடுகளும் சீராகவும் சிறப்பாகவும் இயங்கும். எனவே நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இயங்க நம் மனதின் நலமும் முக்கியமானதாகிறது.