களுபோவில போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொரோனா தொற்று

களுபோவில போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொரோனா தொற்று

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 32 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 8 ஆயிரத்து 870 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியான 4 ஆயிரத்து 75 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 4 ஆயிரத்து 776 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவளை மேல் மாகாணத்தில் உள்ள காவல்நிலையங்களுடன் தொடர்புடைய 15 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு 96 காவல்துறை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 708 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹோமாகம காவல்துறை அதிகாரப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை ஊடாக பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ளவிருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்தவிடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிடம் எமது செய்தி பிரிவு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை களுபோவில போதனா வைத்தியசாலையின் காது, தொண்டை மற்றும் மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது,

இந்தநிலையில் அந்த வைத்தியருடன் தொடர்புடைய மற்றுமொரு விசேட வைத்தியரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, மீகொடை விசேட பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 23 வர்த்தகர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டபகுதியில் கொரோனா தொற்றுறுதியான பெண்ணொருவர் பொகவந்தலாவ பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு சென்றமையில் அந்த ஆலயம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆலயத்திலுள்ள மேலும் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்Nகு இன்று பி.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொட்டகலை - பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் - யொக்ஸ்போர்ட் பிரிவு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பேலிகொடை மீன் சந்தை தொடர்பின் அடிப்படையில் 38 வயதுடைய ஒருவருக்கு இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் வட்டகொடை நகர்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் வட்டக்கொடை பகுதியில் இன்று தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.