சர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது.

2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்து இருப்பதாக கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்திய சந்தையிலும் சாம்சங் முதலிடம் பிடித்து உள்ளது.

சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தகைய பங்குகளை பெற்ற முதல் நிறுவனம் சாம்சங் தான் என கவுண்ட்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ஹூவாய் நிறுவனம் 16 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது.

 

 கேலக்ஸி எஸ்20 பிளஸ்

 

2020 ஆகஸ்ட் மாதத்தில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சாம்சங் மொபைல் விற்பனை ஊரடங்கு போன்ற காரணங்களால் தொடர்ந்து சரிவடைந்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சாம்சங் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறது.

 

கொரோனா ஊரடங்கு மந்த நிலையில் இருந்து சாம்சங் மீண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியது மற்றும் இந்தியர்கள் மத்தியில் சீனா பொருட்களுக்கு எதிரான மனநிலை போன்ற காரணங்களால், சாம்சங் விற்பனை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.