மட்டக்களப்பில் எலிக் காய்ச்சலால் பெண் மரணம்

மட்டக்களப்பில் எலிக் காய்ச்சலால் பெண் மரணம்

மட்டக்களப்பில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரை குடியேற்றக் கிராமத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் நுஷ்ரத் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே நேற்று மரணமடைந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை குறித்த பெண் திடீரென காய்ச்சலால் சுகவீனமடைந்து இடுப்பின் ஒரு பகுதி அவருக்கு செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக வியாழனன்று அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

ரிதீதென்ன, 2ஆம் பரம்பரைக் குடியேற்றப்பகுதி, ஓமடியாமடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீராடுவதற்கும் ஏனைய பாவனைக்கான நீரைப் பெறுவதற்கும் அருகிலுள்ளகடவத்தமடு குளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குளத்தைச் சூழ அடர்ந்த புற்புதர்களைக் கொண்ட இந்தப் பகுதியில் எலிகள் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.