கொடூர தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய தேரர்.. முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு

கொடூர தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய தேரர்.. முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு

தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொல்லால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தாம் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார். 

நேற்று (14) தனது யூடியூப் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது நாட்டின் முதற்பெண்மணி எதிர்பாராத விதமாகத் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகக் தெரிவித்தார்.

நலம் விசாரித்த முதற்பெண்மணி

அந்த இக்கட்டான சூழ்நிலையில் பெலவத்தையிலிருந்து தனக்குப் பாரிய ஆதரவு கிடைத்ததாகவும், தன்னை அழைத்து நலம் விசாரித்த ஜனாதிபதியின் மனைவிக்கு தனது ஆசீர்வாதங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

அத்துடன், அமைச்சர்களான வசந்த சமரசிங்க, நாமல் கருணாரத்ன, பொலிஸ் மா அதிபர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் தனக்கு உதவியதாக அவர் நன்றி தெரிவித்தார்.

தனது முதுகுத்தண்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சியிலிருந்து, ருவன்வெலி மகாசாயவின் ஆசீர்வாதத்தாலும் அநுராதபுர மக்களின் உதவியாலுமே தான் உயிர் தப்பியதாக தேரர் விபரித்தார்.

வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாத தான், மகாசாயவுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளிலேயே தங்கியிருப்பதாகவும், மகாநாயக்க தேரர்களால் கைவிடப்பட்ட தன்னை அட்டமஸ்தான அதிபதியே பிள்ளை போல் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொடூர தாக்குதல்.. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவை வெளியிட்ட சத்தாரத்ன தேரர், அநீதிக்கு எதிராகத் தான் துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும் உயிரைத் தியாகம் செய்யத் தயார் என்றார்.

கொடூர தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய தேரர்.. முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு | Rajangana Saddharathana Thero President Anura Wife

 

ஜனாதிபதியை மதச்சார்பற்றவர் என விமர்சிப்பவர்களைச் சாடிய அவர், பஞ்சசீலத்தைக் கடைப்பிடிக்கும் ஜனாதிபதியே உண்மையான பௌத்தர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் பலாங்கொட கஸ்ஸப, இத்தேகந்தே, உலப்பனே மற்றும் மிஹிந்தலை தேரர்களுக்கும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டி திலித் ஜயவீர மற்றும் சில தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

நாடு கட்டியெழுப்பப்பட்ட பின்னர் தான் இறந்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்த தேரர், நாட்டின் சுபீட்சமே தனது ஒரே ஆசை எனக் குறிப்பிட்டார்.