வடக்கு மாகாணத்தில் 12பேருக்கு கொரோனா! இன்றும் வெளியாகவுள்ள முடிவுகள் - சுகாதார பிரிவு தகவல்
வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நாட்களில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டதயடுத்து 150 பேர் உடனடியாகவே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலையில் 42 பேரிடமும் மாலையில் 51 பேரிடமும் என மொத்தம் 93 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த 93 மாதிரிகளில் முதன் முதலாக இனம்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் முதலாவது தொடர்பாளர்களான 42 பேரின் மாதிரிகளின் முடிவுகளில் நேற்று முன்தினம் 27 பேரினது முடிவுகள் வெளிவந்த நிலையில் அதில் ஐவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதில் எஞ்சிய 15 பேரின் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தபோது அதில் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டாம்நிலை தொடர்பாளர்கள் என இனம்காணப்பட்ட எஞ்சிய 51 பேரின் முடிவுகள் இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.