கூகுள் மீட் செயலியில் இரண்டு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வீடியோ சாட் செயலிகள் பெரிதும் உதவி வருகின்றன.
சமீப காலக்கட்டத்தில் அதிக பிரபல செயலிகளாக உருவெடுத்துள்ள ஜூம், கூகுள், மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும் மற்ற செயலிகளுடன் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன. எனினும், போட்டியில் நிலைத்திருக்க ஒவ்வொரு செயலியிலும் தொடர்ந்து புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் கூகுள் மீட் செயலியில் புதிதாக இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இவை அக்டோபர் 8 ஆம் தேதி முதல் பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
'கூகுள் மீட் செயலியில், அக்டோபர் 8 முதல் Q&A மற்றும் Polls என இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஒவ்வொருத்தரும் ஆர்வத்துடன் பங்கேற்று இருப்பதை உறுதி செய்யும்' என கூகுள் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.