நீண்ட பாரம்பரியம் மிக்க செல்போனில் இத்தனை வளர்ச்சிகளா?

உலகில் செல்போன்கள் உருவாக்கப்பட்டது முதல் இன்று அதில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகள் பற்றி சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

செல்போன்கள் 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. மார்ட்டின் கூப்பர் முதல் தலைமுறை செல்லுலார் போனை உருவாக்கி அரிய சாதனை படைத்தார். அவரது தொடர் முயற்சியால் 1973ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் வயர் இணைப்பு இல்லாத முதல் செல்போன் வெளியிடப்பட்டது. அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் தயாரிப்பாக செல்போன் அறிமுகமானது.

 

இந்தியாவில் செல்போன் சேவை 1995 முதல் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது. தொலை தூர தொடர்புக்காகவும், அறிவியல் விஞ்ஞானிகள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் செல்போன்கள் மிகவும் பயன்பட்டு வருகிறது. 

இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகிக்கிறோம்.

நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. மேலும் எஸ்எம்எஸ் மூலம் மாதத்திற்கு 500 கோடிகளுக்கு மேல் கருத்துக்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றோம் என தெரிய வருகின்றது.

 

செல்போனை ஒரு உள்ளங்கை கணினிபோல நாம் பயன் படுத்துகிறோம். செல்போன் இணையதள சேவையின் மூலம் உலகில் பல்வேறு இடங்களில் நடந்தவை, நடந்து கொண்டு இருப்பவை, இனி நடக்க இருப்பவை என அனைத்தையும் மிக துல்லியமாக அறிந்து கொள்கிறோம். இது இணையதளம் மற்றும் செல்போன்கள் ஆற்றும் மிகப்பெரிய சேவையாகும்.

 

செல்போன்களால் நாம் ஒரு வகையில் பயனடைந்து வளர்ந்து வருகிறோம். ஆனாலும் சில தீமைகளும் செல்போன் வழியே வந்து சேர்கிறது. செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. 

 

பெண்களுக்கு தேவையற்ற தொல்லைகளும் செல்போன் வழியே வந்து சேர்கிறது. செல்போன்கள் கிருமிகளின் சிறந்த வசிப்பிடமாக அமைந்து நோய்கள் பரவ காரணமாக இருக்கின்றன. மேலும் செல்போன் கதிர் வீச்சின் மூலம் சில உயிரினங்கள் அழிந்து வருவதாகவும், மனிதர்களுக்கும் பலவித நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞான எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன.