நீர்த்தேக்கங்களின் அணைகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை!

நீர்த்தேக்கங்களின் அணைகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை!

மத்திய மலை நாட்டில் உள்ள  மகாவெலி நீர்த்தேக்கங்களின் அணைகளின் நிலை மற்றும் நில நடுக்கம் காரணமாக அவற்றில் ஏற்படும் தாக்கம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் 24 மணிநேர கண்காணிப்பு அமைப்பொன்றை அமைப்பதற்கு மகாவெலி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் பொறியியல் பீடத்தின் உதவியுடன் குறித்த அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக மகாவெலி அதிகாரசபையின் பணிப்பாளர் செனரல் சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் அணைகளில் அமைக்கப்படும் சென்சர்களால் குறித்த அணைகளுடன் தொடர்புடைய சிறிய அதிர்வுகளையும் பதிவு செய்ய முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நீர்த்தேக்கங்களின் அணைகளில் ஏற்படும் தாக்கங்களை கண்காணிப்பதற்கென  ஒரு  பிரத்தியேக குழு மற்றும் தனி கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்குமெனவும் பணிப்பாளர் செனரல் சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மகாவலி நீர்த்தேக்கத்தின் அணைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையெனவும் மகாவெலி அதிகாரசபையின் பணிப்பாளர் செனரல் சுனில் பெரேரா தெரிவித்துள்ளார்.