உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரி – ரணிலே பொறுப்பு : பொன்சோகா குற்றச்சாட்டு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் அதில் தலையிட முடியாது.
எனவே மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டின் தலைமைத்துவம் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். புலனாய்வு தகவல்கள் தொடர்பில் அரச மட்டத்தில் உள்ளவர்களுக்கு நாம் அறிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இறுதியில் பயங்கரவாத செயற்பாடு காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாத நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.