சாணக்கியன் உள்ளிட்ட 06 பேர் விடுதலை

சாணக்கியன் உள்ளிட்ட 06 பேர் விடுதலை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலி மேலும் தெரியவருகையில்,

திலீபனை நினைவுகூரும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தினை தவறான வழியில் நடாத்த முற்படுவதாக சட்டத்தரணி சுமந்திரன் கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார்.

யுத்ததில் திலீபன் இறக்கவில்லையென பொய்யான வகையில் குற்றசாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தினை வீண் விரயம் செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தினையும் நீதிமன்றில்தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து தொடரப்பட்டிருந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். பொய்யான குற்றசாட்டுகளை வைத்து வழக்குகளை தயார் செய்யும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்தார்.