மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள மனுக்கள்..!

மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள மனுக்கள்..!

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

ஐந்து பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளன.

குறித்த திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில் 32 மனுக்கள் சார்பில் சட்டத்தரணிகள் தங்களது சமர்பணங்களை முன்iவைத்துள்ளனர்.

ஏனைய மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற மனு பரிசீலனைகளின்போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, 20ம் திருத்தச் சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களில், நீதித்துறை சுயாதீனம், அடிப்படை உரிமை என்பன தொடர்பில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சமர்ப்பணம் முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், 20ம் திருத்தச் சட்டமூலம் ஊடாக, அரசியலமைப்பு சபை நீக்கப்படுவதாக சுட்டி;காட்டியுள்ளார்.

இந்த சட்டமூலத்தின் மூலம், ஜனாதிபதியை சட்டத்திற்கு மேலனவராக்குவது இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதனை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், கட்டாயமாக பொதுக்கள் அபிப்பிராயத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றும் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.