நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் சரிவை சந்தித்தமைக்கான பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த பினான்ஸ் கம்பெனி பி.எல்.சீ நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை எதிர்நோக்கி வருவது மற்றும் இது போன்ற நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகம் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு இது போன்ற நிதி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்துமாறு பிரதமர் இதன்போது அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைப்பாளர்களுக்கு அவர்களின் வைப்புத்தொகைகளில் நூற்றுக்கு 97 சதவீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி துணை ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன தெரிவித்தார்.