3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி!!! கொடூரச் சம்பவம்!!!

3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி!!! கொடூரச் சம்பவம்!!!

21 ஆம் நூற்றாண்டிலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு பேய்தான் காரணம் என நம்பும் பழக்கம் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி பேய் பிடித்தது ஒரு இளம்பெண்ணாகவோ, ஆணாகவோ இருந்தாலும் பரவாயில்லை. ஒரு 3 வயது குழந்தைக்குப் பேய் பிடித்து இருப்பதாக நம்பி பூசாரியிடம் பெற்றோர்களே அழைத்துச் சென்ற சம்பவம் கடைசியில் சோகத்தில் முடிந்து இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒலெக்கெரோ பகுதியில் வசித்து வந்த தம்பதி பிரவீன்-ஷியாமளா. இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா எனும் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்தக் குழந்தை சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்த நிலையில் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பக்கத்தில் உள்ள சவுடம்மாள் எனும் ஒரு அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

மேலும் அங்குள்ள 19 வயது பூசாரி ஒருவரிடம் குழந்தைக்கு உடம்பு சரியில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதைப்பார்த்த அந்தப் பூசாரி குழந்தைக்குப் பேய் பிடித்து இருக்கிறது. சிறப்பு பூசை செய்யவேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறப்பு பூசை செய்ய குழந்தையின் வீட்டிற்கு வந்த அந்தப் பூசாரி சில பூசைகளை செய்ததோடு பிரம்மை வைத்து குழந்தையை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதனால் அந்தக் குழந்தை வலிதாங்காமல் மயங்கி விழுந்திருக்கிறது. பின்பு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு பூசாரி நடையைக் கட்டியிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தையின் நிலையைப் பார்த்த பெற்றோர்கள் பதறி ஒரு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து இருக்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து இருக்கிறது. இச்சம்பவத்தால் அதிர்ந்துபோன அந்தப் பெற்றோர் சிக்ஜாஜுர் காவல் நிலையத்தில் பூசாரியின் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் 19 வயது பூசாரியை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.