மொபைல் போன்களில் பண பரிமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
மொபைல் போன்கள் இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் மணிபர்ஸ் போன்று உருமாற்றம் அடைந்துள்ளன. பலருக்கும் மொபைல் வாலெட்கள் இதற்கான வசதிகளை வழங்குகின்றன. ஒருவரது வங்கிக்கணக்கில் பணம் வைத்திருப்பதை போன்று மொபைல் வாலெட்டில் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.
இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்றபோது இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது. இதுபோன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டி இருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? மொபைல் போனில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.
பொதுவாக ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் மென்பொருள் அறிந்தவர்கள் அதை இயக்கிவிட முடியும்.
எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போதுமானதல்ல என்பதை உணர வேண்டும். பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.