சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக விசேட சலுகைகள் : பிரசன்ன ரணதுங்க!

சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக விசேட சலுகைகள் : பிரசன்ன ரணதுங்க!

நாட்டில் சுற்றுலாத்துறையை, கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் காணப்பட்ட நிலையை விட, சிறப்பான நிலைக்கு முன்னோக்கி கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த இலக்கை அடையத் தேவையான திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர், நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும்போது, இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் அதேவேளை, சுற்றுலாத்துறையை முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டில் இலட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கும் சுற்றுலாத்துறை, பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியமானதொரு துறையாகும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறையும் சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், அவர் இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையிலான அரசாங்கத்தின் தூரநோக்குடனான செயல்பாடுகள் காரணமாக, உலகின் வளர்ந்த நாடுகளை விட இலங்கை கொரோனா தொற்றை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.