வீடு தேடி வந்த ’பாசக் காரி’

வீடு தேடி வந்த ’பாசக் காரி’

கொழும்பு, மாளிகாவத்தை ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற தம்பதியினரின் முகத்தில் மயக்கமூட்டும் ரசாயனத்தைத் தெளித்து, 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பலே இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.

சல்வார் ஆடை அணிந்த பெண் ஒருவர், "வீடு விலைக்கு வாங்க வேண்டும்" என்று கூறி முதற்கட்டமாக இந்த முதிய தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தம்பதியினருடன் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண், சிறிது நேரத்தில் தனது கணவர் மற்றும் தரகர் (Broker) எனக் கூறி மேலும் இரண்டு ஆண்களை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார்.

வீட்டைப் பார்ப்பது போல் நடித்த அக்கும்பல், திடீரெனத் தங்களது வசம் வைத்திருந்த மயக்கமூட்டும் ரசாயனத்தை (Chemical Spray) முதிய தம்பதியினரின் முகத்தில் அடித்துள்ளனர். இதனால் தம்பதியினர் இருவரும் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்ததையடுத்து, அவர்கள் அணிந்திருந்த தங்க மோதிரங்கள் மற்றும் தங்கக் காதணிகள் உள்ளிட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை அக்கும்பல் கொள்ளையடித்துள்ளது.

கொள்ளையடித்த பின்னர் தம்பதியினர் உடனடியாக வெளியே வந்து சத்தமிடாமல் இருப்பதற்காக, வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. சில மணி நேரங்களின் பின்னர் மயக்கம் தெளிந்த தம்பதியினர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பூட்டை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த தெமட்டகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குப் பொலிஸ் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் கடைகளின் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சந்தேக நபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.