ஜூலையில் அறிமுகமாகும் லெனோவோ லீஜியன்
லெனோவோ நிறுவனம் லீஜியன் பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அறிவித்தது முதல் லீஜியன் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் லீஜியன் ஸ்மார்ட்போன் ஜூனை மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என லெனோவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அறிவிப்பினை லெனோவோ சீன சமூக வலைதளமான வெய்போவில் டீசர் மூலம் வெளியிட்டது. லெனோவோ லீஜியன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் கேமிங் அனுபவத்தை வழங்க ஏதுவாக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பல்வேறு பாப் அப் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக கேமிங் தவிர ஸ்மார்ட்போனை கிடைமட்ட வாக்கில் பயன்படுத்த முடியும். இதற்கென யூசர் இன்டர்பேசில் மாற்றம் செய்யப்படலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போன் 90 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், இரண்டாவது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், நாட்ச் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. லீஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனுடன் கேம் பேட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ப்ரோடெக்டிவ் கேஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்படலாம்.