11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர்

11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில், 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் சேஸிங் செய்து அசத்தியது.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் 224 ரன்கள் வெற்றி இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

 

ஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. மிடில் ஓவர்கள் சற்று பின்தங்கியதால் நெருக்கடி ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 16.1 ஓவரில் 161 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.

 

அப்போது ராஜஸ்தான் அணிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ராபின் உத்தப்பா பவுண்டரிகள் அடிக்க ராஜஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டது.

 

 

18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார். முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்களே தேவைப்பட்டது.

 

19-வது ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்சர் 2-வது மற்றும் 3-வது பந்தை இமாயல சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார். அதற்கு அடித்த பந்தில் டெவாட்டியா ஒரு சிக்ஸ் விளாசினார்.

 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 11 பந்தில் 8 சிக்சர்கள் அடித்தது. ஒரு சிங்கிள் உள்பட 49 ரன்கள் அடிக்க அணியின் வெற்றி உறுதியானது. ராகுல் டெவாட்டியா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 7 சிக்சருடன் 53 ரன்கள் அடித்தார். இவர் கடைசி 8 பந்தில் 36 ரன்கள் அடித்தார். முதல் 23 பந்தில் 17 ரன்களே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாப்ரா ஆர்சர் 3 பந்தில் 2 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.