தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி
டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றின் 51ஆவது லீக் ஆட்டத்தில் இன்று (01.03.2026) தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 73 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் குவேனா மபாக்கா மற்றும் கோர்பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய டெவால்ட் பிரேவிஸ் 42 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.