மேல்மாகாணத்தில் விசேட சோதனை- கடந்த 24 மணிநேரத்தில் 484 பேர் கைது
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 484 பேர் கைது செய்யபட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 169 பேரிடம் இருந்த 329 கிராமுக்கும் அதிகமான தொகையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 133 பேரிடம் இருந்து 47 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்காவின் இரண்டு உதவியாளர்கள் போதைப்பொருட்களுடன் மீகொடை - ஹபரக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 5 கிராம் ஹெரோயினும் 3 கிராம் ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
28 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் பட்டவல மற்றும் அத்துருகிரிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் - பேசாலை - பெரிய கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து 24 கிலோ கிராம் மஞ்சள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் தொகை இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் தொகை பாரவூர்தியில் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நான்கு கிலோகிராம் தங்கத்துடன் புத்தளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கத்தை 21 துண்டுகளாக பிரித்து உந்துருளியில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற போதே சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைதானவர் புத்தளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைவர் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரம் கிளிநொச்சி - பூநகரி - அரசபுரம் வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட முதிரைமரக் குற்றிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் ஒன்றுக்கு அமைய இன்று அதிகாலை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்தாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த மோசடி இடம்பெற்றுள்ள நிலையில், பளை மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வீடொன்றில் நுழைந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஒருவர் குறித்த வீட்டில் இருந்து கடந்த 17 ஆம் திகதி 35 ஆயிரம் ரூபா பணத்தினையும் 20 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டிருந்தார்.
பின்னர் தங்க நகைகளை மேலும் ஒருவரிடம் விற்பனை செய்திருந்த நிலையில் குறித்த இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் குருநகர் பகுதியை சேர்ந்தவர்களுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.