ஐந்து கேமராவுடன் உருவாகும் சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போன்

ஐந்து கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஐந்து கேமரா சென்சாருடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ72 எனும் பெயரில் உருவாகி வருகிறது. இது ஐந்து கேமரா சென்சார் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. இது சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ71 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

 

இதுதவிர அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன்களின் கேமரா மாட்யூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்ட முதல் மாடலாக கேலக்ஸி ஏ72 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

இத்துடன் உயர்-ரக கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் OIS தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ72 மாடலுடன் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.