தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோர் குறித்து வெளியான தகவல்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோர் குறித்து வெளியான தகவல்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த 16 இலட்சம் பேர், அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிகக் கடிதத்தை மாத்திரமே வைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026-ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று (25) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்குத் தேவையான பொலிகார்பனேட் அட்டைகளின் தட்டுப்பாடு காரணமாகவே ஆட்பதிவுத் திணைக்களம் அடையாள அட்டைக்குப் பதிலாகக் கடிதமொன்றை விநியோகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்குப் பொலிகார்பனேட் அட்டையில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், 2006-ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோர் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Digital Id Card Launch Nic Shortage

அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அனைவருக்கும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1.6 மில்லியன் பேர் அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட கடிதத்தை வைத்துள்ள நிலையில், அதற்காக 5 மில்லியன் பொலிகார்பனேட் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் முதலாவது தொகுதி அட்டைகளை நாட்டுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பயன்பாட்டிலுள்ள அடையாள அட்டைக்குப் பதிலாக பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்க 2012-ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் அதன் முதலாம் ஆண்டிலேயே அந்த வேலைத்திட்டத்தில் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோர் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Digital Id Card Launch Nic Shortage

டிஜிட்டல் அடையாள அட்டைக்கான கொள்முதல் நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்து, இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டிற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மக்கள் அரச அலுவலகங்களுக்கு வருகை தருவதைப் பெருமளவில் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.