எஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை!

எஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை!

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

தினசரி மற்றும் வரா இதழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தோம். ஏவி.எம் ஸ்டுடியோவின் 4-வது தளத்தில் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்தது. நிகழ்ச்சியின் இடைவேளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு இடைவேளையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், தொகுப்பாளர் ரமணனைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக எஸ்.பி.பியை மொய்த்துக் கொண்டார்கள். அப்போது நான் இதயம் பேசுகிறது வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வந்தது.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 50 வயதைக் கடந்த பத்திரிகையாளர்களைப் பெயர்சொல்லி அழைத்து “எப்படி இருக்கீங்க பிரதர்?” என்று நலம் விசாரித்தார் எஸ்.பி.பி. “எல்லாத் துறை மாதிரியும் பத்திரிகைத் துறைக்கும் நிறைய புதியவர்கள் வந்திருக்கீங்க.. உங்களை எல்லாம் அறிமுகப்படுத்திக்க விரும்புறேன்...” என்று கூறிவர், “உங்க பெயர், பத்திரிகை பேர் சொல்லுங்க” என்று கேட்டு, ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பைத் தெரித்தார். பிரபல நாளிதழின் சார்பில் வந்திருந்த ‘இண்டேர்ஷிப்’ பத்திரிகைத் தம்பி ஒருவர், எஸ்.பி.பியிடம் ‘சார் உங்களோட ‘மலரே மௌனமா’பாட்டு வந்து நாலு வருஷமாச்சு.. இன்னும் அதைத்தான் நான் பாடிக்கிட்டிருக்கிறேன்.. எனக்காக அந்தப் பாட்டை ரெண்டுவரி பாடமுடியுமா?’ என்றார். அவ்வளவுதான். மக்கள் குரல் பத்திரிகையிலிருந்து வந்திருந்த அதன் செய்தி ஆசிரியர்.. “வாட் ய நான்சென்ஸ் மிஸ்டர்.. ஐ வில் கம்ப்ளைட் டு யுவர் எடிட்டர்.. கீப் கொயட்” என்று அந்தத் தம்பியை அந்த ஸ்தலத்திலேயே ஆங்கிலத்தில் வசைபாடி விட்டார்.

அதைக்கேட்டுத் துடித்துப்போனார் எஸ்.பி.பி. “என்ன அண்ணே... அவன் நம்ம தம்பி.. அவன் கேட்டதுல என்ன தவறு.. நான் பாடுறதுக்காகத்தானே இருக்கிறேன்..” என்று ‘மலரே மௌனமாக’ பாடலை ஒரு பயிற்ச்சிப் பத்திரிகையாளனுக்கா பல்லவி கடந்து ஒரு சரணத்தையும் பாடியபோது அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அத்தனைபேரும் அங்கே குவிந்துவிட்டது மட்டுமல்ல; குண்டுசி விழுந்தாலும் சத்தம் கேட்கிற அமைதியில் உறைந்துபோய் எஸ்.பி.பியின் குரலில் மயங்கிக் கிடந்தனர். அதன்பின் எஸ்.பி.பியுடன் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரும் போட்டி போட்டுவிட்டு, அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரையோ, அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்தவரையோ கூட சட்டை செய்யாமல் அங்கிருந்து கலைந்து சென்றபோது, அங்கே கூடிய பத்திரிகைப் பறவைகளின் கூட்டம் அந்தப் பாடகனுக்கானது என்று புரிந்துபோனது.

அந்தப் பத்திரிகைத் தம்பி இன்று தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர். அன்று அவரிடம் கேட்டேன். என்ன பாஸ்.. ‘நாமெல்லாம் பத்திரிகையளர்கள்’அதை மறக்கலாமா என்றேன். அந்தத் தம்பியோ என்னிடம் தீர்க்கமாக ‘சார் நான் முதல்ல எஸ்.பி.பியோட ரசிகன்.. அப்புறம்தான் பத்திரிகைக்காரன்’என்றார். இது எஸ்.பி.பியின் குரல் செய்த மாயம். செய்யும் தொழிலையே மறக்கச் செய்யும் பிரம்மாண்டத் தாக்கம்.

அதன்பின் 7 வருடங்களுக்குப் பிறகு நான் அமுதசுரபி பத்திரிகையின் தீபாவளி மலருக்கு எஸ்.பி.பியின் பேட்டி வேண்டும் என்று முயன்று வந்தேன். சென்னை, மகாலிங்கபுரத்தின் ஒரு பகுதியாகிய காம்தார் நகரில் இருந்த எஸ்.பி.பியின் வீட்டுக்கு விட்டல் அண்ணாவின் பரிந்துரையுடன் சென்றிருந்தேன். விட்டல் அண்ணாதான் எஸ்.பி.பியின் பேட்டி வேண்டும் என்றால் ஏற்பாடு செய்பவர். பல கட்ட உறுதிப்படுத்தலுக்குப் பின், நான் தயார் செய்து கொடுத்திருந்த 25 கேள்விகள் அடங்கிய பட்டியலுக்குப்பின் என்னைச் சந்திக்க வைத்தார். காலை 11 மணிக்கு அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மகாலிங்கபுரம் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அற்புதமான கும்பகோணம் டிகிரிக் காப்பியும் இறக்குமதி செய்யப்பட்ட குக்கீஸ் பிஸ்கட்டுகளும் வந்தன. நான் காபியை மட்டும் அருந்திவிட்டு எஸ்.பி.பியின் சந்திப்புக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

எஸ்.பி.பி. வந்தார் “வரும்போதே எந்தவிதத் தோழமையோ தொடர்போ இல்லாத எனது பெயரைக் குறிப்பிட்டு காபி சாப்பிட்டிங்களா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். அணிச்சையாக நான் எழுந்து நின்று இருகரம் கூப்பி அவரை வணங்கினேன். எனது கூப்பிய கரங்களை அவரது இரு கரங்களாலும் பிடித்து இழைத்து தனது நெஞ்சுக்குழி வைத்து அப்படியே என்னை அனைத்துவிட்டு என்னை உட்காரச் சொன்னார். “உங்கள் கேள்விகள் படிச்சேன்.. இந்தக் கேள்விகள் எல்லாத்துக்குமே பலமுறை பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் அமுதசுரபி, உங்க எடிட்டர் விக்ரமன் எல்லாரையும் பிடிக்கும். எனக்கு வருஷா வருஷம் கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர்கள் டான்னு வந்துடும். நானும் படிச்சுடுவேன்... இந்த வருஷம் விட்டுடுவோம்.. சுத்தமா உட்கார்ந்து பேச நேரமில்ல. நீங்களும் இன்னும் கொஞ்சம் புதிய கேள்விகளோட வாங்க. விட்டல்கிட்ட சொல்லிடுறேன். கண்டிப்பா அமுதசுரபிக்கு பேட்டி தருவேன்.” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து அவருக்கு போன்.. அவரைப் பார்த்த வியப்பிலும் அவர் என்னை கட்டியணைத்து நண்பனைப்போல் கொண்டாடியதிலும் நான் மெய் மறந்து பதில் கூற முடியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன்... அவர் காரில் ஏறி புறப்பட்டார்.

விட்டல் அண்ணா வந்து என்னை வழியனுப்பி வைத்தார். ‘சார் இப்போ என்னப் படத்துக்கு பாடப்போகிறார்?’என்றேன். ‘கலசா ஒலிப்பதிவுக் கூடத்தில் ரேக்கார்டிங். ‘மழை’ ஒரு படம்.’என்றார். சில மாதங்கள் கழித்து தீபாவளிக்கு முன்பு வெளியான அந்தப் படத்தில் ஜெயம் ரவி - ஸ்ரேயா ஜோடிக்காக ‘தப்பே இல்ல.. தொட்டுக்கோ தப்பே இல்ல.. தள்ளி நின்னா வாழ்க்கையில உப்பே இல்ல’ என்ற இளமைத் துள்ளாட்டம் போடும் பாடலைப் பாடியிருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட்.

இப்போது எண்ணிப்பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்காக கே.வி.மகாதேவன் இசையில் ‘ஆயிரம் நிலவே வா’ பாடி அறிமுகமான எஸ்.பி.பி, ஜெயம்ரவி வரையில் ஆறு தலைமுறை நடிகர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளில் 43 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தனக்கு சொறுபோடுவது தமிழ் மொழிதான் ‘தமிழ்தான் எனக்கு அண்ணபூரணி’ என்று பகிரங்கமாகப் பேட்டிகளில் சொன்னவர்.

எஸ்.பி.பி. பாடாத உணர்ச்சிகள் என்று திரையிசையில் எதுவும் இல்லை. குறிப்பாக காதலின் கனிந்த குரலையும் அது தரும் உற்சாகத்தையும் எஸ்.பி.பி. அளவுக்கு இரண்டரக் கலந்து தேன் தடவிய குறும்புக் குரலில் பாடிய ஆண் பாடகர் என்று யாரையுமே ஒப்பிட முடியாது. அதேபோல சோகத்துக்கான பாடல், காதல் தோல்வியின் பாடல் என்றால் அது எஸ்.பி.பிதான். கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், முரளி வரையில் காதல் தோல்வியின் குரலை ஒவ்வொரு நடிகரின் குரலைப்போலவே ஒலிக்கத் தந்தாலும் தனது குரலின் தனுத்துவத்தை அவர் என்றைக்குமே விட்டுக்கொடுத்தது இல்லை.

எஸ்.பி.பியின் பாட்டுப் பயணத்தில் இளையராஜாவும் வைரமுத்துவும் மிகப்பெரிய ஆகிருதிகளாக இருந்திருப்பதை படங்களும் பாடல்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இசையமைப்பாளரின் மெட்டினை மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச்சென்று பாடுவதில் மட்டுமல்ல; பாடலாசிரியர்களின் வரிகளை வார்த்தைகளை சிறிதும் சிதைக்காமல் உச்சரித்த ஒரே மகா கலைஞனும் எஸ்.பி.பி.தான்.

பாடகர் என்ற அரியணையே எஸ்.பி.பிக்கு சாஸ்வதமாக இருந்தபோதும், சினிமா நடிப்பிலும் தனித்து முத்திரை பதித்தார். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர். மறுத்துவிட்டார். சிறந்த புல்லாங்குழல் கலைஞரான இவர், ‘அகரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து அற்புதமாக இசையமைத்தார். ‘கேளடி கண்மணி’ படத்துக்காக மூச்சுவிடாமல் பாடிய எஸ்.பி.யின் மூச்சுக் காற்று நின்றிருக்கலாம். ஆனால், அவரது மூச்சு தமிழர்களின் மூச்சுக்காற்றில் பாடல்களாக நிறைந்திருக்கிறது.

“இப்போவரை நான் ஆசைப்பட்டதுக்கும் மேலதான் எல்லாமே எனக்கு நடந்திருக்கு. இந்த ஜென்மத்துக்கு இது போதும். இன்னொரு ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, திரும்ப எஸ்.பி.பி-யாகவே பிறந்து, உங்க காது குளிரப் பாடி, என் கடனைத் தீர்த்துக்கணும். அதுக்குக் கடவுள் வாய்ப்பு தருவார்னு நினைக்கிறேன்” ஒருமுறை பேட்டியில் உங்களின் நிறைவேறாத ஆசை என்ன என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வாழ்வின் மீதான காதலின் உச்சம் மிக்கவனாக, எஸ்.பி.பி எனும் மகா கலைஞன் பேராசையுடன் கூறிய  வார்த்தைகள் அவை. மீண்டும் எஸ்.பி.பி பிறக்கும்வரை அவர் குரலால் நம்முடன் வாழ்ந்துகொண்டு இருப்பார். அவர் நம் மூச்சுக்காற்றில் கலந்துவிட்டவர். மரணம் இல்லா மனிதர். எஸ்.பி.பி. அமைதியுற்றார். அவ்வளவே...!