13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி
இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது.இதன்போது ஸ்ரீலங்கா பிரதமருடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
“ இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்”.
இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனானபௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டொலர்கள் உதவி அறிவித்தார்.
பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்திய-இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கௌரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்”
“அத்துடன் 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்குஅதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது.”என்று கூறியதாகத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த காணொளி உரையாடலில் பேசிய ஸ்ரீலங்கா பிரதமர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ''கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையின் பிரதமாராக ஆகஸ்ட் 9-ஆம் திகதி பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.
இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்'' என்று ராஜபக்ச கூறினார்.