மலையக மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் "தேயிலைச் சாயம்" கண்காட்சி
மலையகத்தைச் சேர்ந்த 40 இளைஞர், யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 120 புகைப்படங்களை உள்ளடக்கிய "தேயிலைச் சாயம்" புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமானது.
இந்தக் கண்காட்சியானது கொழும்பு 07, லயனல் வென்ட் கலை நிலையத்தில் இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது.
இலங்கையில் நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்தும் நிறுவனம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களம் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த புகைப்படக் கண்காட்சி இடம்பெறுகின்றது.
மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளைப் போலவே தமிழ் சமூகம் இந்த புகைப்படக் கண்காட்சிக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியதோடு நீண்டகாலச் செயற்பாட்டின் பெறுபேறாக இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
”நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது தொலைக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது ஒரு தேநீர் கோப்பையை சுவைக்கின்றீர்களா? அது உங்களுக்கு எவ்வளவு இனிமையை சுகத்தைக் கொடுக்கிறது? ஆனால் இந்தச் சுவையான தேநீர் கோப்பையின் சுவையின் அடியில் உள்ள கண்ணீரின் கதையை நீங்கள் அறிவீர்களா? தேநீர் கோப்பைக்காக கஷ்டப்படும் சகோதர மக்களைப் பற்றி நீங்கள் ஒரு நொடிப்பொழுது யோசித்தீர்களா?”
அந்தத் தேநீர் கோப்பையில் மறைந்திருக்கும், மலையக மக்களின் வாழ்க்கையை, நாம் இப்புகைப்படக் கண்காட்சியின் ஊடாகப் படம்பிடித்துக் காட்டுகின்றோம்.” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையின் குறுக்கு வெட்டை காட்சிப்படுத்துவதே இப்புகைப்பட கண்காட்சியின் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது.
அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார வாழ்வு பற்றிய சமூக உணர்வை வழங்குவதன் மூலம் அவர்களுடைய யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.
மலையகப் பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பெருந்தோட்டங்களைச் சார்ந்த இளைஞர்களும் யுவதிகளும் படம்பிடித்த புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.
நுவரெலிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஹொலிருட் மற்றும் லொகி பெருந்தோட்டங்களும், பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊவா ஹைலன்ட் மற்றும் அட்டம்பிடிய ஆகிய பெருந்தோட்டங்களின் இளைஞர்களும் யுவதிகளும் இதன்போது பங்களிப்புச் செய்துள்ளனர்.
சுமார் ஓராண்டு காலம், சில செயலமர்வுகள் ஊடாக புகைப்படப்பிடிப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவையும் கலை மற்றும் சமூக அரசியல் அறிவையும், சமூக மாற்றத்திற்கான கலையைப் பயன்படுத்துவது பற்றிய அறிவையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூக வாழ்வு அவர்களாலேயே கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலையக தமிழ் மக்களின் வாழ்வினை மூன்றாம் கண்ணோட்டத்தில் கண்கானிப்பதன் செய்வதன் ஊடாக சமூக உணர்வை பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும்.
இலங்கையில் பிரசித்திபெற்ற இரண்டு புகைப்படக் கலைஞர்களான நதிஷ்க்க ரணசிங்க, அஜித் செனெவிரத்ன ஆகிய இருவரும் மலையக இளைஞர் யுவதிகளுடன் தொடர்புகொண்டு, புகைப்படம் எடுத்தல் பற்றிய அறிவையும் தேர்ச்சியையும், மேற்படி இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சி வழங்கினர்.