கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞனைப் பிரித்துவிட்டது- மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எஸ்பிபி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்!

கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான உலகில் மக்களின் மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து எஸ்.பி.பி!  

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவர்.

தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துரையினருக்கும், ரசிகர்களுக்கும் தி.மு.க. சர்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

காலம் அவரைப்பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல்; என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்!