கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்தால் எதிர்காலம் சுபீட்சமாகும் – வடமராட்சியில் டக்ளஸ் தெரிவிப்பு

கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்தால் எதிர்காலம் சுபீட்சமாகும் – வடமராட்சியில் டக்ளஸ் தெரிவிப்பு

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமாராட்சி பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடனான சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் அவர் நடத்திய சந்திப்பிலேயே குறித்த கருத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

மேலும், வடக்கு - கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் மேற்கொண்ட தவறுகளையும், அது ஏற்படுத்தி இருக்கின்ற எதிர் விளைவுகளையும் மனதில் வைத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின், சிறப்பான வாழ்வாதாரத்தை - கௌரவமான வாழ்கையை - நியாயமான அரசியல் தீர்வை, தேசிய நல்லிணக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆகவே, கட்சியின் செயற்பாட்டாளர்கள் அனைவரும், அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும் அதற்கான காரணங்களையும் மக்களின் மனங்களில் பதியும் வகையில் எடுத்துக் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

Tags : #Douglas Devananda #People #Eelam People's Democratic Party