வீடுகளில் எரிபொருள் சேமிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் மட்டுமே விநியோகத்தைக் கட்டுப்படுத்த QR (கியூ.ஆர்) முறைமை பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், இந்த நேரத்தில் QR முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எந்நேரமும் அதனை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இன்று (02) காலை 9:45 மணி வரை சுமார் 29 லட்சம் லீட்டர் டீசல் மற்றும் 29 லட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றும் சுமார் 69 லட்சம் லீட்டர் எரிபொருள் சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது எனவும் டி.ஜே. ராஜகருணா எச்சரித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்று மாத்திரம் சட்டவிரோதச் சேமிப்புத் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.