தொலை காணொளி மூலம் இடம்பெறவுள்ள இரு நாட்டு பிரதமர்களின் கலந்துரையாடல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி தொலை காணொளி மூலம் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
இந்த உச்சிமாநாடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக தெரிவானதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதன்போது, இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக தொலைகாணொளி மூலம் உச்சிமாநாடு ஒன்றை நடத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும்26 ஆம் திகதி இந்த உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது.
அரசியல், பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, கலாசார மற்றும் பரஸ்பர ஆர்வமிக்க பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சர்கள் மற்றும் இரு நாடுகளினம் சிரேஷ்ட அதிகாரிகள் உச்சிமாநாட்டில் தலைவர்களை இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.