
மூன்று விசேட காவல்துறை குழுக்கள் நியமனம்....!
கொழும்பு – சுதந்திர சதுக்க வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி அவருக்கு கிடைக்கப்பெற்ற விதம் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொய்ன்ட் 22 அரெஸ்டா ரக கறுப்பு நிறமான குறித்த துப்பாக்கி தொடர்பில் இவ்வாறு ஆராயப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் தமது நெருங்கியவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் அந்த துப்பாக்கியை தாம் கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த துப்பாக்கி யாரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது மற்றும் அவருக்கு கிடைக்கப் பெற்ற விதம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, இது போன்ற துப்பாக்கிகளை விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக கொள்வனவு செய்யப்படுவதாக எமது செய்தி சேவை முன்னெடுத்த தேடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரிவினர் தவிர்ந்த வேறு எவரேனும் துப்பாக்கியை பயன்படுத்துவதற்காக கொள்வனவு செய்தால் அதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர் பயன்படுத்திய துப்பாக்கியை கொள்வனவு செய்வதற்கு அவ்வாறான அனுமதிப்பத்திரம் அவசியம் இல்லை எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கி அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.