மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நடந்த கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 21 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கி தொடக்கத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு பணியின்போது மேலும், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

 

இதனால், மும்பை கட்டிடவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் 10-க்கும் அதிகமானோர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

 

இந்த கட்டிட விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.